செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டில் 300க்கும் மேற்பட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் கடந்த 5 தலைமுறையாக வசித்து வரும் முத்தாலம்மன் கோயில் தெரு முதல் துலுக்காணத்தம்மன் கோயில் தெரு வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட பிரதான சாலையும். இதேபோல் முருகமங்கலம் கிராமம், பிள்ளையார் கோயில் தெரு பிரதான சாலையும் கடந்த 2006-ம் ஆண்டு சிமெண்ட் சாலையாகவும், சாலையின் இருபுறமும் கால்வாய் வசதியும் செய்து கொடுக்கப்பட்டன. இந்நிலையில், மேற்படி சாலைகள் குண்டும். குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அவசர ஆபத்துக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பைக்கில குடும்பத்துடன் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பழுதாகி வருகிறது.
மேலும் மேற்படி சாலையில் இருபுறமும் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் அதிகளவு பெருகி பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாட்டி வதைக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீருடன் கலந்து கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து வீடுகளுக்குள் பாய்ந்து விடுகிறது. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள். மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டோர். முதியோர் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கால்வாய்களில் குடிநீர் பைப் லைன் உள்ளதால் அதில் உடைப்பு ஏற்படும்போது குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் அனைவருக்கும் சலி, இருமல், காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, உள்ளிட்ட பலவேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்து வலியுறுத்தியும் இதுவரை எந்த ஒரு பயனும் இல்லை.
மேலும் துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் எதிரே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பொது கழிப்பறை பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வீணாக கிடக்கிறது. இதனை அகற்றிவிட்டு ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் 4வது வார்டில் உள்ள விநாயகபுரம் பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், அங்குள்ள விளையாட்டு திடலை சீரமைக்க வலியுறுத்தியும், மேலும் விநாயகபுரம் சாலையோரத்தில் சர்வே எண், 7 ல் காலியாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருளர்கள், அதிதிராவிடர்கள் மற்றும் கல்லுடைக்கும் ஏழை தொழிலாளர் குடும்பத்தினரும் பயன்பெரும் வகையில் சமூதாய நலக்கூடம் (அறிவுசார் மையம்) அமைக்க வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட மனுவின் மீது கோப்புக்கள் தயாரித்தும், இதற்காக நிதி ஒதுக்கியும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அனுப்பி வைத்தும் எந்த ஒரு பயனும் இல்லை.
எனவே தமிழக முதல்வர் தலையிட்டு மேற்படி பகுதிகளில் உள்ள சாலையை சீரமைக்கவும். கால்வாய்களை தரமாக அமைக்கவும், ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம், விளையாட்டு திடல் ஆகியவற்றை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் சசிகலா தனசேகரன் தலைமையில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நேற்று இரவு மேளதாளத்துடன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மாபெரும் கையெழுத்து பிரச்சாரம் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















