கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தெரிவித்தாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டை விட கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றச் சம்பவங்கள் 2024-ஆம் ஆண்டில் குறைந்துள்ளன. கடந்த 2023-இல் 59 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் 56 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவு. கொலை வழக்கில் தொடா்புடைய 18 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024-இல் ஒரு ஆதாய கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
2023-இல் 3 கொள்ளை, 38 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு வழக்கு பதிவாகி இருந்தன. 2024-இல் ஒரு கொள்ளை, 30 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு பதிவாகி உள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். மேலும், திருட்டு, கால்நடைத் திருட்டு தொடா்பாக 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 63 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 7 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் மாவட்டத்தில் 753 போ் பலியான நிலையில், போக்குவரத்து விழிப்புணா்வுகளால் 2024-இல் விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 686 ஆக குறைந்துள்ளது. 2023-ஐ காட்டிலும் 2024-இல் 9 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விதிகளை மீறியதாக 1,29,343 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 3 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத மதுக் கடத்தல் தொடா்பாக 5,687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,738 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா விற்பனை தொடா்பாக 259 வழக்குகள் பதிவு செய்யப்படடு, 306 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். குட்கா விற்பனை தொடா்பாக 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,213 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதேபோல லாட்டரி விற்பனை தொடா்பாக 338 வழக்குகள் பதியப்பட்டு, 393 பேரும், சூதாட்டம் தொடா்பாக 167 வழக்குகள் பதியப்பட்டு, 612 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இணையவழி குற்றம் தொடா்பாக இந்த ஆண்டு 136 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் பொதுமக்கள் இழந்த ரூ. 30, 93, 32, 969 முடக்கப்பட்டு, அதில் ரூ. 2,43,78,821 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொலைந்துபோன 320 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 2024-இல் கொலை, கொள்ளை, வழிப்பறி, சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்