சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா, ஐ.பி.எஸ்., தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துச் சொன்னார். மேலும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. ரமேஷ் கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தாளாளர் சத்தியன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி சங்கீதா சத்தியன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் நா. சங்கர சுப்பிரமணியன், துணை முதல்வர் சுபாஷினி ஆகியோரும் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவை முன்னிட்டு பள்ளி வளாகம் கலைநிகழ்ச்சிகள், மாணவர்களின் விளையாட்டு அணிவகுப்புகள் ஆகியவற்றால் உற்சாகமாக களைகட்டியது. மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 56 அணிகள் பங்கேற்றன.தலைமை விருந்தினர் திரு. ஆஷிஷ் புனியா, ஐ.பி.எஸ்., “மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டு நம்மை எப்போதும் உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும்” என்று உரையாற்றினார் .
சிறப்பு விருந்தினர் டாக்டர் எம்.சுந்தர் அவர்கள், “விளையாட்டிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி என்னை அழைத்த உடனே மகிழ்ச்சியுடன் வந்தேன். மாணவர்கள் மாவட்ட அளவிலேயே அல்லாது, தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் விளையாடினால் வெற்றி நிச்சயம்” என்று மாணவர்களை ஊக்குவித்தார். முதற்கட்ட போட்டிகளில் 50 அணிகள் கிரிக்கெட் போட்டியிலும், 21 பேர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவிலும், 7 பேர் இரட்டையர் பிரிவிலும் கலந்து கொண்டனர். முதல் நாளில் கலைவாணி ICSE பள்ளி மற்றும் முத்தையா அழகப்பா பள்ளி அணிகள் மோதின. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மைதானம், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியின் 2 மைதானங்கள், கோவிலூர் ஆண்டவர் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன .
மாணவர்களின் உடல் மற்றும் மன உறுதியை வளர்ப்பதற்கும், விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணருவதற்கும் இப்போட்டிகள் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளன என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது . தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான இப்போட்டிகள் மாணவர்களின் போட்டித்திறன் மட்டுமல்லாது நட்பு, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற பண்புகளையும் வளர்க்கும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றதால் தொடக்கவிழா சிறப்பாக நிறைவடைந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி