மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கணூரை அடுத்த காமராஜர் நகர் பகுதியில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்
படவில்லை எனவும், குடிநீர் மோட்டார் பழுது காரணமாக கடந்த மூன்று நாட்களாக முற்றிலுமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால், உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி