திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் 14ஆம் தேதிக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் 14ஆம் தேதி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும் என வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் வீட்டின் முகப்புகளில் நோட்டீசை ஒட்டி உள்ளனர். இன்று 250 க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குவிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க ஏதுவாக மின்வாரிய அதிகாரிகளும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உள்ளாட்சி துறை ஊழியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்துள்ளதை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஊர் எல்லையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமுறைகளாக குடியிருந்து வரும் வீடுகளை இடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மின் இணைப்பு குடிநீர் இணைப்பு சாலை வசதி என அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கி உள்ள நிலையில் தற்போது தான் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரிகிறதா எனவும் திடீரென வீடுகளை இடித்தால் எங்களது மனநிலை என்னவாகும் என தெரிவித்தனர். போதிய கால அவகாசம் வழங்காமல் வீடுகளை இடிப்பதாக நோட்டீஸ் வழங்கியதால் தற்போது பொருட்கள் அனைத்தையும் வீடுகளில் இருந்து வெளியே எடுத்து எங்கு கொண்டு செல்வது என தெரியாமல் நிற்கதியாய் நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். விவசாயம் கூலித் தொழில் செய்து வரும் கிராமத்தை விட்டு வெளியே எங்கு செல்வது எனவும் மாணவர்களுக்கு தேர்வு வரவுள்ள நிலையில் கிராமத்தை விட்டு வெளியேறினால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கும் எனவும் தெரிவித்தனர்.
சாதி மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் நவீன சமத்துவபுரமாக இந்த கிராமம் விளங்குவதாகவும் இங்குள்ள வீடுகளை இடிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு தான் உயிர் எனவும் வீட்டை இடித்தாலே உயிர் போனது போன்று என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 2006 சட்டத்தின்படி வன நிலங்களில் வாழ்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் தற்போது 80 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதியளித்துள்ள முதலமைச்சர் வனத்துறை இடத்தில் உள்ள மக்களுக்கும் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரியுடன் பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக விடுத்த கோரிக்கையின் பேரில் அதிகாரிகள் தற்போது சிறிது நேரம் அவகாசம் அளித்து காத்திருக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏராளமான காவல்துறையினர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு