குமரி: அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் குலசேகரபுரத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெஸி மேனகா தலைமை தாங்கினார்.குலசேகரபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சுடலையாண்டி, சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெஸி மேனகா பேசியதாவது:
குடும்பத்தில் கணவன் மனைவி, மாமியார் மருமகள் உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறு குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக குழந்தைகளை தேவை இன்றி வெளியே அனுப்பக்கூடாது. மேலும் அவர்களை மிக கவனமாக கையாள வேண்டும்.
இந்தப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் நடமாட்டம் இருந்தாலும், விற்பனை செய்வது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் தேவையற்ற திருட்டு, வழிப்பறி போன்ற பயங்கரவாத குற்றங்களை தவிர்க்கமுடியும். அதேபோல் முக்கிய தெருக்கள், வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது நல்லது. இதன்மூலம் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதுடன் எளிதில் குற்றவாளிகளை அடையாளம் முடியும்.
எனவே பொதுமக்கள் எதற்கும் அச்சப்படாமல் சந்தேகங்களை காவல்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. காவல்துறை பொதுமக்களின் நண்பர் அதே போல் நீங்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சேவையாற்ற தான் உள்ளோம். என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.