மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க புள்ளி மானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டுவனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானுத்து – கல்லூத்து கிராமத்தில் அன்னம் பார்பட்டியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவரது தோட்டத்தை வில்லாணியைச் சேர்ந்த செல்வராஜ் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இன்று ,இவரது தோட்டத்து கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட செல்வராஜ் உசிலம்பட்டி வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், விரைந்து வந்த உசிலம்பட்டி வனச் சரக வனத்
துறையினர் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு மூலம் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர்.
சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் என்றும், அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறை தேடி கீழே வந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட புள்ளிமான் கிணற்றின் மேலே வந்ததும், மீண்டும் வனப் பகுதிக்கே துள்ளி குதித்து சென்றுவிட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி