தூத்துக்குடி: தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் ‘(Thoothukudi Town Traffic Police MARSHAL)” என அழைக்கப்படும் இரு சக்கர வாகன ரோந்து பணியை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகனத்தில் அவசர ஒலிப்பான் (siren), ஒளிரும் விளக்குகள் (Flashing Light), சிறிய ஒலி பெருக்கி (Public Address System) ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகனம் தூத்துக்குடி நகரம் முழுவதும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் 2 சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்களில் ஒருவர் தூத்துக்குடி பீச் ரோட்டிலிருந்து வ.உ.சி காய்கனி மார்க்கெட் வரையிலும், மற்றவர் காய்கனி மார்க்கெட்டிலிருந்து எஃப்.சி.ஐ ரவுண்டானா வரையிலும் சுழற்சி முறையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சுழற்சி முறையில் தினமும் 4 போக்குவரத்து காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.
இவர்கள் தூத்துக்குடி நகர்புறத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியிலும், சாலை விபத்துக்களை தவிர்ப்பதும், சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.
தேவையில்லாமல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்கள் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் உட்பட அனைத்து காவல்துறை போக்குவரத்துப்பிரிவு சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துகணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.