திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் முன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். மேலும் தாழையூத்து காவல் சோதனைச் சாவடி உட்பட தென்கலம் சாலையிலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, காவல் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கண்டறியும் நோக்கில் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது அதில் ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள் என்ற ஆப்பிள்(19). கணேசன் மகன் அஜித்குமார்(30). அதே பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(27). நடராஜன் மகன் சரண்(19). வல்லவன்கோட்டையைச் சேர்ந்த அருண் (22). ஆகியோர் கூட்டாக சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமாரின் சகோதரரை ஒரு வழக்கில் கைது செய்ததால், ஆத்திரமடைந்த அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சரண் என்பவரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்