தென்காசி: தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பணியின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருந்த போது திடீரென காவல் நிலைய தொலைபேசி ஒலிக்கவும், பெண் முதல் நிலை காவலர் – 1318 திருமதி.முருகேஸ்வரி என்பவர் தொலைபேசியை எடுத்து பேசி, உடனடியாக ரோந்து காவலருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.
இதை கவனித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருந்தபோதும் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தாமல் அழைப்பை எடுத்து அதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட பெண் காவலர் முருகேஸ்வரியின் செயலை பாராட்டி உடனடியாக வெகுமதி வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.