நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூட்டம் தஞ்சை காவல் சரக துணைத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நடக்கவிருக்கும் 2024 பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை காவல் சரக துணை தலைவர் திரு ஜியாவுல் ஹக்,,இ. கா. ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உரிய முறையில் அமல்படுத்தி தேர்தலை அமைதியான மற்றும் நேர்மையான முறையில் நடத்துவதற்கும், தேர்தலுக்கு முற்பட்ட மற்றும் பிந்தைய காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிப்பது குறித்தும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்தும், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய நான்கு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
காவல் அதிகாரிகளை பிரச்சனைக்குரிய மற்றும் பதட்டமான பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரவும், அடிக்கடி ரோந்து பணிகளில் ஈடுபடவும், மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் காவல் பணி செய்யுமாறு அறிவுறித்தினார்கள். மேலும் சிறந்த முறையில் துரித தகவல் தொடர்புக்கான ஏற்பாடுகள் செய்தும், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு இரு மாநிலக்கு இடையே குற்றவாளிகளில் ஊடுருவலை தடுப்பதற்கும், தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் உரிய முறையில் பெற்று நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள். மேலும், முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் சோதனை சாவடிகள் அமைக்கவும், மற்றும் பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் தேவையான காவல் அலுவலர்களை நியமித்து இப்போதிருந்தே பாதுகாப்பு பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.
காவலர்களை ரோந்து பணியில் தொடர்ந்து அடிக்கடி ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் பிணையில் விடக்கூடாத நிலுவையில் உள்ள பிடியாணைகளை உடனடியாக விரைந்து நிறைவேற்றும் படி அறிவுறுத்தினார். மேலும், பிரச்சனைக்குரிய நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்கள். சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் காரைக்கால் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.