திருச்சி: திருச்சிமாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட 16 காவல் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறைகளான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்கள் மாயம், பெண்களை மானபங்கம் படுத்துதல், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் உதவி மையம் தொடங்கப்பட்டது.
இதில், மாநகர காவல் ஆணையர் திரு.அருண் கூறும்போது, “காவல்துறையினர் மீது பொது மக்களுக்கும் பெண்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து வரும் காரணத்தினால் அவர்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கின்றனர். அந்த, நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு காவலர்களும் செயல்படவேண்டும். திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மேலும், இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் திரு.சக்திவேல், கூடுதல் காவல்துறை ஆணையர் திரு.வனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் திரு.தமிமூனிஷா, திருச்சி மாநகர காவல் சட்ட ஆலோசகர் திரு.ராதா, மகளிர் திட்ட உதவி அலுவலர் திரு.ஜான்பால் ஆண்டனி, தொழிலாளர் துறை ஆய்வாளர் திரு.லட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.அனிதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.கமலா மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் பெண் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் ஆளுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பெண் உதவி மையத்திற்கான 24 மணி நேரம் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி 112, 181 மற்றும் குழந்தைகள் உதவி எண் 1098 என்ற எண்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். மேலும், உதவி மையத்தில் பெறப்படும் புகார்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இடத்திற்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.
பெண்கள் உதவி மையத்திற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு 16 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 16 அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மடிக்கணினிகளை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண் காவல் ஆளுநர்களுக்கு ஆணையர் திரு.அருண் வழங்கினார்.