தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்காக (07.02.2024) நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நிர்வாக காரணங்களுக்காக வரும் (09.02.2024) அன்றைய தினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 470 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் 303 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேற்படி 303 பேருக்கு ஏற்கனவே அறிவித்தபடி (08.02.2024) வியாழக்கிழமை அன்று உடல் திறனாய்வு தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும்.
நாளை (07.02.2024) 459 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால் (09.02.2024) அன்றைய தினமான வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நாளை (07.02.2024) வரவேண்டிய 459 விண்ணப்பதாரர்களுக்கும் (09.02.2024) அன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறுநாளான (10.02.2024) சனிக்கிழமை உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.