திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் (28.11.23)-ந்தேதி திருச்சி மாநகரில் உள்ள சிறப்பு முகாமினை பார்வையிட்டார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள காவல் ஆளினர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து காவல் ஆளிநர்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார்கள்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினர் சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்பட வழக்குகளில் சம்மந்தப்பட்ட பல நாடுகளை சேர்ந்த 99 முகாம்வாசிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு முகாமில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், மாநகர காவல்துறையினர், மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தை சேர்ந்த காவல்துறையினர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையர் அவர்கள் தலைமையில் 24 மணிநேரமும் மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சிறப்பு முகாமிற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் (28.11.23) நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் பாதுகாப்பு பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு உள்ள குறைகள் பற்றி கேட்டறிந்தார்கள். அதன்படி பாதுகாப்பு பணியிலிருக்கும் காவல் ஆளிநர்களுக்கு தற்காலிக செட் அமைக்கவும், கழிப்பிட கட்டிடங்களை கட்டவும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் கூறி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்கள். காவல் ஆளிநர்கள் முகாம் வாசிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், வெளியே இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை செல்வதை தடுக்க வேண்டுமென்றும், சிறப்பு முகாமினை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.