திருவள்ளூர்: அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிடங்குகளில் ரசாயன மூல பொருட்கள் விற்பனையை ஒழுப்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ரசாயன கிடங்கு உரிமையாளர்களுடன் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது கிடங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய கிடங்கு உரிமையாளர்கள் காவல்துறையை அணுகுவதில் சற்று கடினமாக உள்ளதாகவும், காவல்துறை மக்களின் நண்பன் என்பது போல எளிமைப்படுத்திட வேண்டும் என்றனர். மேலும் பல்வேறு ரசாயன மூலப்பொருட்களை கையாள உரிமம் பெறுவதற்கான வழிகளை அரசு மேலும் எளிமைப்படுத்திட வேண்டும் எனவும், வெவ்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படாமல் ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்கிட வேண்டும் என கேட்டு கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் சங்கர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து ரசாயன பொருட்கள் சேமிப்பு கிடங்குகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ரசாயன பொருட்களின் விற்பனை தொடர்பாக முறையாக ஆவணங்களை பராமரித்திட வேண்டும் எனவும், எந்தவிதமான ரசாயன பொருட்களையும் ரசீதின்றி விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தினார். மேலும் விற்பனை செய்யப்படும் மூல பொருள் எங்கெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. என்பது குறித்து ஆவணங்களை பராமரித்திட வேண்டும் எனவும் அப்போது ஆணையர் கூறினார். இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் உள்ள ரசாயன கிடங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு