அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி, மலர், பினா, ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் டிக்சி என்ற மோப்பநாய் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரத்தநாடு அரசு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு மருத்துவ பரிசோதனையில் டிக்சிக்கு முதுகு தண்டுவட புற்றுநோய் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதைனையடுத்து டிக்சிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் (11.03.2024) இன்று சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்த டிக்சி என்ற மோப்பநாய் அரியலூர் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது. இந்நிலையில் இறந்த டிக்சியின் உடலை மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.