கள்ளக்குறிச்சி : (30.12.2023) -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr. திரு.N. கண்ணன் இ.கா.ப., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அப்போது மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவு, சமூக நீதி மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார். பின்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட அறிவுரைகள் வழங்கினார்.
விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடப்பாண்டு முழுவதும் பல்வேறு வழக்குகளில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த 77 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். இதனால் காவல்துறையினர் மத்தியில் சிறப்பாக பணிபுரிய நல்ல ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் போது விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப., கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜவஹர்லால், திரு.மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மூன்று மாவட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.