தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் 71 பேர் கைது – 300 மதுபாட்டில்கள், 500 கிராம் கஞ்சா, 1400 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் நேற்று (05.12.2021) ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் சூதாட்டம் ஆடியவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 9 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 15 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 8 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்து 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 30 பேரும், கஞ்சா விற்பனை செய்த 4 பேரும் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்குகளில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 295 மதுபாட்டில்கள், 500 கிராம் கஞ்சா, 1400 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 2000/-மும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் அந்தந்த உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.