விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 12 ஆண்டுகளாக கணேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் காரியாபட்டி போலீசில் அளித்து உள்ள புகார் மனுவில், கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி முதல் வீட்டில் இருந்த தனது மனைவி உமாதேவி மற்றும் குழந்தைகள் 2 பேரை காணவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கணேசனின் மனைவி உமாதேவி ரூ.9 லட்சத்தை மோசடி செய்துள்ளார் எனவும், எனது பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள உமாதேவியிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உமாதேவி மீது சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் பண மோசடி புகார்கள் கொடுத்தனர். அந்த புகார் மனுக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து காரியாபட்டி போலீஸ்நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.மனோகர் உத்தரவின் பேரில் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திரு.அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் உமாதேவி காணவில்லையா அல்லது தலைமறைவாக உள்ளனரா என தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் உமாதேவி மற்றும் அவரது 2 குழந்தைகள் கடந்த 2 மாதங்களாக தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையொட்டி நேற்று மதுரையில் தலைமறைவாகி இருந்த உமாதேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை காரியாபட்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 2 குழந்தைகளை அவரது கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். காரியாபட்டி போலீஸ் நிலையத்திற்கு உமாதேவியை அழைத்து வந்த தகவல் தெரியவரவும் புகார் அளித்தவர்கள் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதை தொடர்ந்து உமாதேவி மீது 30-க்கும் மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டார் என புகார் மனுக்கள் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் உமாதேவியை விசாரித்த போது சுமார் ரூ.1 கோடிக்கு மேலாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி மோசடி செய்ததாகவும், சுமார் 30 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளையும், நிலம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் தெரியவந்துள்ளது. கைதான அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.