சென்னை: கோவை உக்கடம் பகுதியில், (23/10/ 2022), அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், அவர்கள் தலைமையில் (26/10/2022), தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் கோவை மாவட்டத்தில், செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இதுபோன்ற சம்பவங்களில் விசாரணையில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தாபுரம், கவுண்டம்பாளையம், ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் காவல்துறையில் ஒரு சிறப்பு படையை உருவாக்கிடவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும் கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலத்தின் உளவுப் பிரிவு கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும், இது போன்ற சட்டவிரோத செயல்கள் ஈடுபடுவோரை பற்றியும் அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்பருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும் அவர்களை ஊக்குவித்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முனைவர் திரு.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பணிந்திர ரெட்டி, காவல் தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.டேவிட்சன், காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.