திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. நேரம் கடந்தும் விழா நடந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த முஷாரப் (19) என்கிற வாலிபர் காயமடைந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், போலீசாரை முற்றுகையிட்டு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நேரம் இருட்டி விட்டதால் போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதனால் போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மேலும் வாலிபர் முஷாரப் இறந்தது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, முஷாரப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டையை அடுத்த சோலையூர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், முத்தாகவுண்டனூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, நவின்குமார், பிரவின் குமார், அன்பரசன், பூமணி, தமிழரசன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 36 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களில் 35 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.