கரூர்: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (21.10.2025) ஆம் தேதி கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இந்த ஆண்டு பணியின்போது வீர மரணமடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. M . தங்கவேல், இ.ஆ.ப அவர்கள், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K .ஜோஷ் தங்கையா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. M . கண்ணன் அவர்கள், கரூர் கோட்டாச்சியர் திரு.M . முகமது பைசல் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. N.பிரேமானந்தன் மற்றும் T . பிரபாகரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. V .செல்வராஜ், திரு. K .K . செந்தில்குமார், திரு. P. அப்துல் கபூர், திரு. N. முத்துக்குமார், திரு. P. ராஜேஷ், திரு. N. வெங்கடாசலம், மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களையும் நினைவு கூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.