மதுரை: மதுரை, உசிலம்பட்டி 58 கால்வாயை விரிவாக்கம் செய்து வைகை அணையிலிருந்து எழுமலை பகுதியில் உள்ள கண்மாய்
களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்து வறண்டு காணப்படுகிறது.
இதனால், விவசாயிகளும் பிழைப்பு தேடி கேரளா, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வைகை அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீரை எழுமலை பகுதிக்கு வழங்குவதை போன்றே, உசிலம்பட்டி பகுதிக்கு வரும் 58 கால்வாயை விரிவுபடுத்தி எழுமலை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்கினால் 10 கண்மாய் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியடையும் என , 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















