மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை எல்லையில் நிகழும் குற்றச் சம்பவங்களை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலைய சரகத்தில் கடந்த (10.07.2024) ம் தேதி மதுரை தெற்கு வட்டம், விரகனூர் குரூப், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் விஜயலட்சுமி மற்றும் கிராம உதவியாளர் திருமதி. நாகதேவி ஆகிய இருவரும் விரகனூர் கிராம எல்லைக்கு உட்பட்ட விரகனூர் ரிங்ரோடு அருகே ரோந்து பணியில் இருந்த போது மதுரை to இராமேஸ்வரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ள கலா இரும்பு கடைக்கு அருகில் உள்ள விரகனூரைச் சேர்ந்த செல்லையா மகன் இராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் குளியல் தொட்டி அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்று பார்த்த போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தலை, முகம், கை மற்றும் காலில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். எனவே மேற்படி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கின் விசாரணையில், இறந்து போன நபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இடைக்காட்டுரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி கலைச்செல்வி (47) (SC/PL) என்று அடையாளம் கண்டறியப்பட்டது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து மதுரை மாநகர் மதுரை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 160க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முத்தனேந்தல் பகுதி அன்னியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் இளங்கோவன் (55) (பிள்ளைமார்) மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி மேற்படி இறந்த நபருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இறந்த நபர் குற்றவாளியிடம் சுமார் 6 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றி வந்ததாகவும், சம்பவ நாளன்று சம்பவ இடத்தில் மேற்படி குற்றவாளி மற்றும் இறந்த நபர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் குற்றவாளி இறந்த நபரை கட்டையால் அடித்து கொலை செய்ததாக தெரியவருகிறது. இவ்வழக்கில் இறந்த நபரை அடையாளம் காணவும், அதே போல் இவ்வழக்கில் சம்மந்தப்பட்டகுற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்யவும், சிறந்த முறையில் பணியாற்றிய தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்