விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலை தொடர்கிறது. கடந்த 6 மாதங்களில் உணவு பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் 150 டன் கடத்தல் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து 125 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தும் போதும், கிட்டங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் போதும் மட்டுமே ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை தொடர்கிறது. ஆனால் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்படுகின்றதோ அந்த இடங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளது. ரேஷன் அரிசி கடத்துவோர் பொதுமக்களிடமிருந்து சேகரிப்பதாக போலீசார் தெரிவித்தாலும், ரேஷன் அரிசி வினியோகத்தில் செய்யப்படும் முறைகேடுகள் காரணமாக ரேஷன் அரிசி மொத்தமாக வெளிச்சந்தைக்கு கடத்தப்படுவதே உண்மை நிலை என கூறப்படுகிறது.
ஆனால் அந்த இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்த போலீசாருக்கு சட்டபூர்வ அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் ஆய்வினை முறையாக நடத்தாத நிலையில் ரேஷன் அரிசி வெளிச்சந்தைக்கு கடத்தப்படுவது தொடர்கிறது. எனவே தமிழக அரசு ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வெளிச்சந்தைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தேவையான சட்டங்களை இயற்றி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் அதற்கான அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாவது ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.