திருப்பூர்: திருப்பூர்மாவட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த கார் குறித்த விவரங்களை கூறி, உஷாராகுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அப்போதுதான் அந்த கார் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்தவர் சென்னை திருநின்றவூர் நாச்சியார் சத்திரம்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பதும், அந்த கார் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
மேலும், காரில் இருந்த பெண் செந்திலின் மனைவி சத்யா (34) மற்றும் அவர்களுடைய 6 வயது மகள் என்பதும் தெரியவந்தது.
சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த வெள்ளகோவிலை சேர்ந்தவருக்கு சொந்தமான காரை பயன்படுத்தியது எப்படி? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் டிரைவர் கார்த்திக் கூறிய திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
சென்னையை சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் சிவன் என்பவருக்கும், விழுப்புரத்தை சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையே தொழில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே ராஜேஷ் கண்ணாவுக்கும், பிரபல ரவுடி செந்திலுக்கும் தொடர்பு இருந்துள்ளது. பின்னர் செந்தில் மூலமாக சிவனை கடத்தி செல்லும்படி ராஜேஷ்கண்ணா கூறியுள்ளார். அதன்படி செந்தில் தனது காரில் ரியஸ் எஸ்டேட் அதிபர் சிவனை கடத்தி சென்று உள்ளார். அதன்பின்னர் சிவன் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை.
அங்கு கார்த்திக்கிடம் கடத்தப்பட்ட தொழிலதிபா் சிவன் எங்கு உள்ளார். செந்திலுடன் வேறு யாரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்தில் விழுப்புரம் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.