சென்னை : கஞ்சா வேட்டை – 3.0 என்ற அதிரடி நடவடிக்கை துவங்கப்பட்டு, மூன்று நாட்களில், 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க, 2021 டிச., 6ல் இருந்து, ‘கஞ்சா வேட்டை – 1.0 மற்றும் 2.0’ என்ற அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதில், 13 ஆயிரத்து 320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 25 ஆயிரத்து 295 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது; 1,891 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, 36 ஆயிரத்து 875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 521 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகள், 4,023 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 616 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, ‘கஞ்சா வேட்டை – 3.0’ என்ற அதிரடி நடவடிக்கை துவங்கப்பட்டு, மூன்று நாட்களில், கஞ்சா வியாபாரிகள், 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா பதுக்கல் மற்றும் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்க வேண்டும் என, எஸ்.பி., மற்றும் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.