தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கஞ்சா பழக்கம் மற்றும் மது உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா இல்லாத ஊராட்சியாக ஓசஅள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதை பாராட்டும் விதமாக ஓசஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட போசி நாயக்கன அள்ளியில் கஞ்சா இல்லாத ஊராட்சி என்ற பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முனைவர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து கிராமங்களில் அதிகரித்து வரும் இளம் வயது திருமணத்தை தவிர்க்க வேண்டும் இதனால் குழந்தைகளின் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அதேபோல போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்தாமல் தடுக்கவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இதன் மூலம் குற்ற நடவடிக்கைகளும் குறையும் என்றார். விழாவில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்கள் கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் விழா முடிவில் கஞ்சா,மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று காவல்துறை அதிகாரிகளோடு பொதுமக்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.