சென்னை : சென்னை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 4 பெண்கள் உள்பட 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது பயிற்சியின் ஒரு பகுதியாக சென்னை வந்தனர். அவர்களுக்கு, கடலோர பாதுகாப்பு படை சார்பில் சென்னை மெரினா கடலில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை செய்து காட்டப்பட்டது. கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ‘சவுர்யா’ கப்பலில் சென்று, பயிற்சி பாடத்திட்டத்தை கற்றறிந்தனர். மேலும் கடல் மார்க்கமாக பாதுகாப்பை வலுப்படுத்துவதில் நிலவும் சவால்கள் குறித்து கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இதேபோன்று இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பங்கு, அமைப்பு ரீதியான கட்டமைப்பு, வரையறுக்கப்பட்ட கடமைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்கள்.