விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். சிவகாசி பராசக்தி காலனி பகுதியில் உள்ள கடவுளை காண கட்டணம் இல்லை முருக பக்தர்கள் பாதயாத்திரைக்குழு சார்பாக, ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவார்கள். இந்த ஆண்டு பாதயாத்திரை செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கடந்த சில வாரங்களாக மாலையணிந்து விரதம் இருந்து வந்தனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இன்று காலை, சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில், கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்த பின்பு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையை துவக்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, புஷ்பக்காவடி, பன்னீர் காவடி சுமந்து செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களை, அவர்களது உறவினர்கள் திரண்டுவந்து வழியனுப்பி வைத்தனர். இன்று சிவகாசி பகுதியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையை துவங்கியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி