கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திருமதி. அங்கிதா IPS, மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா, துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திரு. இளஞ்செழியன்,மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். உறுதிமொழி இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ மனம், வாக்கு, செயல் ஆகிய எந்த வகையிலும் சமூக வேற்றுமையை கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்திற்கு இணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்கிறேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உறுதியளிக்கிறேன்.
















