தூத்துக்குடி: குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் (Child Welfare Officer) செயல்பட்டு வருகின்றனர். மேற்படி குழந்தைகள் நல காவல் அலுவர்களுக்கான அறிவுரைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று (09.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும், அவர்களை கையகப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்தும், தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு அவர்கள், தூத்துக்குடி சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு-I காவல் துணை கண்காணிப்பாளருமான திரு. ராஜூ அவர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.