தென்காசி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட ஆயுதப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவலர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நீத்தார் நினைவு ஸ்தூபியில் பணியின் போது தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறையினரின் குடும்பங்கள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து ரக துப்பாக்கிகள் காட்சிக்காக வைக்கப்பட்டது, மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பங்கு பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.