அரியலூர் : மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில், கருணாலயா – சுபம் ஒருங்கிணைந்த மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மைய உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு வழிநடத்துவதில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பங்கு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் அவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக செயல்படுவதுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.















