திருச்சி: திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்(31). இவரை பக்தர்கள் பாலாசாமிகள் என்றும் தேஜஸ் சுவாமிகள் என்றும் அழைத்து வருகின்றனர்.
இவர் கரூர் மாவட்டம் ஒத்தக்கடையில் ஒரு கோவிலை கட்டி வழிபாடு நடத்துவதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு குறிசொல்லி வருகிறார்.இந்த நிலையில் தேஜஸ் சுவாமிகள் என்ற பாலசுப்பிரமணியன், வக்கீல் ஒருவருடன் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில் ”உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் நமக்கு தெரிந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் 42 ரவுடிகள் என்கவுண்ட்டர் திருச்சி: ஸ்ட்டில் இருக்கின்றனர். இதில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் மட்டும் 12 பேர். திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் என்னை வந்து பார்த்து சென்றனர். உங்களுக்கு தெரிந்த ரவுடியை பத்திரமாக இருக்க சொல்லுங்கள்” என்று பேசுவதுபோல் அந்த வீடியோ அமைந்துள்ளது.
இதேபோல் தேஜஸ் சுவாமிகள் வக்கீலுடன் பேசிய வேறு ஒரு ஆடியோவில், சைரன் வைத்த காரில் அமைச்சர் சேகர்பாபுவை போய் சந்தித்தாகவும், தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும் அமைச்சர்கள் பலரும் தன்னிடம் ஜோசியம் கேட்பதற்காக வந்து செல்வதாகவும் கூறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தேஜஸ் சுவாமிகள் என்ற பாலசுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.அவருடன் பேசிய கார்த்திக் என்ற வக்கீலிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் என்கவுண்ட்டர் பட்டியலில் இருப்பதாக சாமியாரால் கூறப்பட்டு தேடப்பட்டு வந்த கொட்டப்பட்டு சேர்ந்த ரவுடி விஜயகுமார் கொடைக்கானலில் இருப்பதை அறிந்த தனிப்படையினர் கொடைக்கானல் சென்று அவரை கைது செய்தனர்.
அவரையும் திருச்சி அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சாமியார் பாலசுப்ரமணியன், வக்கீல் கார்த்திக் மற்றும் ரவுடி விஜயகுமார் ஆகிய 3 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.