திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வரும் ரெயில்களில் ரெயில்வே போலீஸ் சிறப்பு தனிப்படை பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பீகாரிலிருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 1 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அந்த ரெயிலில் சிறப்பு தனி படை பிரிவினர் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழ் இருந்த பேக் ஒன்றை சோதனை செய்தபோது 10 பண்டல்கள் இருந்தன.அவற்றை பிரித்தபோது 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அந்த இருக்கையில் பயணித்தவர் அதனை கடத்தி வந்ததும், அவர் பீகார் மாநிலம் நிர்பூரை அடுத்த காஸ்மாரா பகுதியை சேர்ந்த சங்கர் பிரசாத் மந்தர் மகன் அமித் குமார் (21), என்பதும், நிர்பூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி எர்ணாகுளம் சென்று அதனை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அமித்குமாரை போலீசார் கைது செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.