தூத்துக்குடி: நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் விரைவாக கிடைக்கவும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 அடிப்படையாக கொண்டு தேசிய நுகர்வோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் – 24 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்படி சட்டம் மத்திய அரசினால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019 என்று மாற்றியமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் – 24 அன்றும், உலக நுகர்வோர் உரிமை தினம் மார்ச் 15 அன்றும் அனைத்து துறைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் உறுதிமொழி மேற்கொள்ள அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி (15.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உலக நுகர்வோர் உரிமை தின உறுதிமொழி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரால் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோடு நுகர்வோருக்குரிய உரிமைகளை நிலைநிறுத்த பாடுபடுவோம், நாம் தரமான பாதுகாப்பான பொருட்களை வாங்குவோம். நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பட்டி (Bill) பெறுவோம், தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம், நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோராக இருக்க ஒன்றுபடுவோம், நுகர்வோர் பாதுகாப்புடன் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019னை பின்பற்றி நுகர்வோராகிய நாம் நமக்கான பாதுகாப்பினை உறுதி செய்வோம், அடிப்படை உரிமைகளை பற்றி அறிவோம், நுகர்வோர் கல்வியை பரப்புவோம், எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம், விழிப்புணர்வுமிக்க நுகர்வோரே அதிகாரம் மிக்க நுகர்வோர் என்பதை அறிவோம் என உளமாற உறுதியளிக்கிறேன்.” என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி திரு. குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.