தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெற்கு கழுகுமலையில் சந்தேகத்திற்கு இடமாக மினிலாரி ஒன்று நின்று கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் மினிலாரிடிரைவர், கீளினர் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் சேலம் மாவட்டம் மாமரத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சீனிவாசன்(36), கீளினர் தர்மபுரி மாவட்டம் மூளக்காடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் மாது (37) என்பது தெரியவந்தது.
மினிலாரியில் சிப்ஸ் ஏற்றி வந்து இருப்பதாக முன்னுக்கு பின் தகவல் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை சோதனை செய்த போது அதில் தமிழக அரசினால் தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை 30 மூட்டைகளும், பான்மசாலா – 6 மூட்டைகளும் மொத்தம் 36 மூட்டை (சுமார்-1242 கிலோ கிராம்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 9 லட்சத்து 30 ஆயிர ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதையெடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 36 மூட்டை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இருவரிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம், பெங்களுர் அருகேயுள்ள பொம்மசந்திரா என்ற இடத்தில் இருந்து கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சந்திரசேகர் என்பர் குடோனுக்கு மேற்படி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலாவை கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன், மாது இருவரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சந்திரசேகரை தேடி வருகின்றனர். 9 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் வந்து பாராட்டி பரிசு வழங்கினார்.