காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட எல்லைப்பகுதியான பெருநகர் தாமல் செவிலிமேடு செட்டிபேடு மணிமங்கலம், உள்ளாவூர்,வடக்கு பட்டு, பொன்னியம்மன்பட்டரை, ஆகிய 18 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதாவது திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசியதேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே நேற்று காலை 6 மணி முதல் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காஞ்சிபுரத்திற்கு யார்? யார்? வருகிறார்கள் என்பதை கண்காணித்தனர். மேலும் அவர்களது முகவரிகளை போலீசார் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
அப்போது கார்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி இ-பதிவு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதா?என்பதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகு அவர்களை மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
அதேசமயம் இ-பதிவு செய்யாமல் வந்த சில வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட எல்லையான செட்டி பேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.