திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(26). இவர் கார் ஒன்றை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அரும்பாக்கம் ஏரியில் முருகன் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ஆரம்பாக்கம் காவல் துறையினர், அவரை மீட்டு எளாவூர் சோதனைச்சாவடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவருடைய சடலம் உடற்கூறு ஆய்வுக்க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே கொலை நடந்த இடத்தை விசாரணை செய்த ஆரம்பம்பாக்கம் காவல் துறையினர் மர்ம கும்பல் இந்த பகுதிக்கு வந்து முருகனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக தலை கழுத்து, கை என வெட்டி சாய்த்ததாகவும், தப்பி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தச்சூர் அருகே கொலை குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்ற போது குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பி முயன்று கீழே விழுந்தனர். இதில் இருவருக்கு காலிலும், ஒருவருக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவு கட்டு போட்டனர். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கொலையை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மூவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எளாவூரில் பதுங்கியிருந்த மேலும் 4பேரை கைது செய்தனர்.
ஆரம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் என்கிற ஷார்ப் சங்கர் (23). ஓபுளாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பொட்டு மணி (27). ஆரம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (21). ஆந்திர மாநிலம் பெரியவேடு சேர்ந்த பாலாஜி (19). ராஜேஷ் (20). ஆரம்பாக்கம் சேர்ந்த சாரதி (20). கும்மிடிப்பூண்டி சேர்ந்த மணிகண்டன் என்கிற போண்டா மணி (35). ஆகிய 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் சங்கரை அவரது குற்றவாளிகள் தாக்கி வெட்டிய போது முருகனும் இருந்ததால் இருவருக்கும் பகை தொடங்கியுள்ளது. சங்கர் ஊருக்குள் கெத்து காட்ட சிலரை தாக்கி வந்ததும் இதனால் மது அருந்தும் ஏரிக்கரையில் வைத்து கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து 7 பேரையும் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு