திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா என்ற இளைஞர் பொன்னேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருவேங்கடபுரம் பகுதியில் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையில் திரும்பியதால் 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணித்த மூவரும் அந்தரத்தில் பறந்தபடி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாலிக் பாஷா (35). என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யுவராஜ் (20). பாலச்சந்தர் (20). ஆகிய இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான மாலிக் பாஷா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே விபத்து தொடர்பான நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் திரும்பும் இருசக்கர வாகனம் எதிரே செல்லும் வாகனத்தை கவனிக்காமல் கவனக்குறைவாக திரும்பியதால் 2 இருசக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு