இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த மாதத்தில் பதிவான குற்றங்கள், அவற்றின் விசாரணை நிலை, குற்றவாளிகள் கைது விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ரோந்து பணிகளை தீவிரப்படுத்துதல், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை மேம்படுத்துதல் குறித்து காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
அதோடு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்து காவல் பணிகளை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















