திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சாம் மகன் மாரிசிவா(21). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் இஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இதனை அபிநயாவின் பெற்றோர் கண்டித்ததால் அபிநயா கடந்த 20-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இது தொடர்பாக அபிநயாவின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதே நாளில் மாரிசிவாவையும் காணவில்லையாம். இது தொடர்பாக மாரிசிவாவின் தகப்பனார் சாம் பணகுடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். பணகுடி காவல் ஆய்வாளர், ராஜாராம் வாலிபர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் பணகுடி தெற்குரதவீதியில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாமல் உள்ள பாழடைந்த வீட்டில் காணாமல் போன அபிநயாவும், மாரிசிவாவும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்