ஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள டிஜிட்டல் பூட்டை சுத்தியல் கொண்டு உடைத்து ஏடிஎம் ஐ திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் . நேற்று காலை பணிக்கு வந்த செக்யூரிட்டி இது குறித்த தகவலை வங்கி அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற பிளஸ் டூ மாணவிகள் மாயம்
ரத்தினபுரி அண்ணா வீதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாயார் அழகம்மாள் அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தார். எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து இரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். இதேபோல பீளமேடு ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியன் என்பவரின் 16 வயது மகள் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு அவரது தந்தை தனது பைக்கில் கொண்டு சென்று விட்டு விட்டு சென்றார். பின்னர் மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து துரைப்பாண்டியன் பள்ளி ஆசிரியரிடம் சென்று கேட்ட பொழுது உங்கள் மகள் இன்று பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துரைபாண்டியன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது
கோவை மார்ச் 3 பொள்ளாச்சி மேற்குப்பகுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமரன் நேற்று பொள்ளாச்சி சீனிவாசபுரம் ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார் அப்போது சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த ஆட்டோ ஓட்டி வந்த சீனிவாசபுரம் முகம்மது ரசூல் வயது 24 கைதுசெய்யப்பட்டார் ஆட்டோவும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சுவாமி சிலைகளுடன் சுற்றிய 2 போ் பிடிபட்டனா்
சுவாமி சிலைகளுடன் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும் அவா்களிடம் இருந்த சாக்குப் பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அப்போது அதில் 2 சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சிலைகள் வெண்கலத்தால் ஆனது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்