கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று 21.10.2020-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நீதிராஜ், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் நாடு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியின் போது வீர மரணம் அடைந்த மொத்தம் 264 பேருக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
வீர வணக்க நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.