திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த இணைய முகவரி மூலம் பதிவு செய்த அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளனர். அதை நம்பிய அவர், அந்த நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.17,16,985 அனுப்பியுள்ளார். பின்னர், அவா்களை தொடர்பு கொள்ள முடியாததால், சைபர் கிரைம் இணையதளத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட அதே நபர்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் மொத்த பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியதை நம்பி மீண்டும் பணத்தை அனுப்பி மொத்தமாக ரூ.22,16,985-ஐ இழந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சித்தீன், சுவிஸ் குமார் ஆகியோரை (28.09.2025) அன்று கைது செய்தனர். திருநெல்வேலி மாநகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆன்லைன் மோசடி குறித்து 507 புகார்கள் பெறப்பட்டதில், ரூ.5,41,19,593 வரை மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதில், 399 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அதிலிருந்த ரூ.75, 84, 339-ஐ மாநகர சைபர் கிரைம் காவல்துறை முடக்கியுள்ளது. மேலும் ரூ.92,91,648 மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்