திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய அவர், மோசடி நபர்கள் அனுப்பிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 54 லட்சத்து 54 ஆயிரத்து 459 அனுப்பியுள்ளார். பின்னர், பலமுறை முயற்சித்தும் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியாததால்
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் காவல்துறையினருக்கு இணையவழியில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடி நபா்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அனைத்து வகை இணையவழி குற்றங்கள், பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது இணைய முகவரி வாயிலாக உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















