சென்னை : சென்னை ஆவடி, பி.வி.புரத்தில், உள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், வரும் 13ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5:45 மணியளவில், குருக்கள் கோவிலை, திறக்கச் சென்ற போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்படி, ஆவடி காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ,பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், குள்ளமான உருவம் கொண்ட மர்ம நபர், கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடிவிட்டு, உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது. மர்ம நபர் குறித்து, காவல் துறையினர், தீவிரமாக விசாரிக்கின்றனர்.