விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60), இவர் விருதுநகர் அருகேயுள்ள வலையபட்டி பகுதியில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். நேற்று மாலை தீப்பெட்டி ஆலையின் கழிவுகளை, ஆலையின் பின் பகுதியில் உள்ள குழிக்குள் போட்டு அழிக்கும் பணிகள் நடைபெற்றது. தீப்பெட்டி கழிவுகளை அழிக்கும் பணியில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கூத்திப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகன் (55), ஈடுபட்டிருந்தார். கழிவுகளை எரித்த போது ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட முருகன், கழிவுகள் எரிந்து கொண்டிருந்த குழிக்குள் மயங்கி விழுந்தார். இதில் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆலையிலிருந்த தொழிலாளர்கள் முருகனின் உடலை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி