தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில், காவல்துறையினரிடமிருந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன, அவற்றை எந்த அளவில் அவர்களுக்கு பணியாற்றி அவர்களது குறைகள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை திருப்திபடுத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டு, ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாம் காவல்துறை அலுவலராக நியமிக்கப்பட்டு பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதிப்படையாமல் அவர்களை பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகும்.
அதே போன்று புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு, அவர்களது புகார்களை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
நாம் பொதுமக்களிடம் நேர்மையான முறையிலும், கனிவான முறையிலும் நடந்து கொண்டால்தான் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும். நாம் எப்போதுமே பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
பொதுமக்களின் காவல்துறையை பற்றிய மன நிலை எப்படி உள்ளது, அவர்கள் காவல்துறையினரிடமிருந்து எந்த மாதிரியான சேவைகளை எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்தும், அவர்களுக்கு சேவைபுரிவது என்பது குறித்தும் எம்பவர் இந்தியா என்ற அமைப்பின் செயல் இயக்குநர் திரு. சங்கர் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நேரடியாக பணியில் சேர்ந்த 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.